தவ்ஹீத் வாதிகளும், அலவி மௌலானாவும் ( யாழ் முஸ்லிம் விளக்கம்)

இச்செய்தியை நாம் பதிவிட்டதும் தவ்ஹீத் வாதிகள் சிலரிடமிருந்து எமக்கு கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. சிலர் பண்பான முறையிலும் எமக்கு இதுபற்றிய விளக்கங்களை அனுப்பியிருந்தனர். மற்றும் சிலர் அந்தச் செய்தியை பழைய கஞ்சி எனவும் வர்ணித்திருந்தனர். இதனால் நாம் அந்தச் செய்தியை பின்னர் நீக்கிவிட்டோம். இருந்தபோதும் குறித்த செய்தியின் பாரதூர தன்மையை தற்போது உணருகின்றமையால் அதனை இங்கு மீண்டும் பதிவிடுகிறோம்
ஆம், அலவி மௌலானா Ceylon Today நாளிதழில் கிழக்கு மாகாணத்தில் செயற்படும் தவ்ஹீத் வாதிகள் பற்றி கடும் விமர்சனங்களை அதில் குறிப்பிட்டுள்ளமை தெளிவாகிறது. யாழ் முஸ்லிம் வலைத்தளமானது எந்தவொரு இயக்க பக்கச்சார்புமின்றி செயற்படுவதை சகலரும் அறிந்துவைத்துள்ளனர்.
இருந்தபோதும் அரசியல் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் தெரிவிக்கும் இதுபோன்ற கருத்துக்கள் பல்லின மக்கள் வாழும் இலங்கையில் அனாவசிய குழப்பங்களை உண்டாக்கிவிடக்கூடாதென்பதற்காகவும், அலவி மௌலானா போன்றவர்கள் நிதானத்துடன் செயற்பட வேண்டுமென்பதற்காகவுமே இந்தச் செய்தியை இங்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுத்து பதிவிடுகிறோம்.
எமது முன்னைய செய்தி
கிழக்கில் முஸ்லிம் ஆயுதக்குழுக்களின் நடவடிக்கைள் அதிகரித்துள்ளதாகவும், மத்திய கிழக்கு நாடுகளும், அனைத்துலக தீவிரவாத அமைப்புகளும் இதற்கு உதவி வருவதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலானாவை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. ஜிகாத் அமைப்பின் நிதியுதவியுடன் செயற்படும் ஆயுதக்குழுக்களால் கிழக்கிலுள்ள சுபி முஸ்லிம்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து முறையிடப் போவதாகவும் அலவி மௌலானா கூறியுள்ளார்.
கிழக்கில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் சுபி முஸ்லிம்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு இந்த ஆயுதக்குழுக்கள் முனைவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். வகாபி இஸ்லாமிய பாடசாலையை பின்பற்றும் இந்த ஆயுதக்குழுக்கள், சுபி முஸ்லிம்களின் மசூதிகளையும், வழிபாட்டு இடங்களையும் தாக்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.
“ இந்தக் குழுக்களுக்கு பல மத்திய கிழக்கு நாடுகள் நிதியுதவி செய்வதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. வறுமையில் உள்ள சில முஸ்லிம் இளைஞர்கள் இந்த ஆயுதக்குழுக்களில் இணைகிறார்கள். இவர்கள் தீவிரவாத அமைப்புகளுடன் இணைந்து போரிடுவதற்குக் கூட அனுப்ப்ப்பட்டுள்ளனர்.
முன்னதாக காவல்துறை இதுபற்றி விசாரணை நடத்தி பலரைக் கைது செய்ததுடன் ஆயுதங்களும் மீட்கப்பட்டன. ஆனால் இப்போதும் இவர்கள் கிழக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்தக் குழுக்களின் அச்சுறுத்தல்களால் காத்தான்குடியில் உள்ள சுபி முஸ்லிம்களால் தமது மார்க்கத்தைக் கடைப்பிடிக்க முடியவில்லை.“ என்றும் அலவி மௌலானா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கிழக்கில் செயற்படும் முஸ்லிம் ஆயுதக்குழுக்கள் தொடர்பாக அரச புலனாய்வுச் சேவை விசாரணைகளை நடத்தி வருகிறது. இந்த விசாரணைகளின் போது, கிழக்கிலுள்ள ஆயுதக் குழுக்களுக்கு முக்கியமான அனைத்துலக தீவிரவாத அமைப்புகளிடம் இருந்து நிதிஉதவி கிடைத்து வருவது தெரியவந்துள்ளதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
ஆங்கில செய்தி
Post a Comment